முஸ்லிம் தீவிரவாதி(?) – வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்.பாகம்:5 .
இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், பிரஞ்சு, டச்சு என இன்னபிற ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் ஏராளமான போர்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் 1857-ல் நடைபெற்ற புரட்சிப் போருக்குத் தான் இந்தியப் போர் என்ற தேசியச் சாயல் முதன் முதலாகக் கிடைத்திருக்கிறது. அதுவரை நடைபெற்ற எல்லா போர்களும் பகுதிவாரியான பெயர்களிலே அழைக்கப்பட்டன. ஏனெனில் மற்ற போர்கள் அனைத்தும் வெற்றி தோல்வி என எதுவாயினும் துவங்கிய இடத்திலேயே முடிந்து விடும்
ஓரிடத்தில் துவங்கி ஊரெல்லாம் பரவி தேசத்தின் பெரும் பகுதியை ஆட்கொண்டு ஆர்ப்பரித்தது என்பது தான் 1857-ஐ ஏனைய போர்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.
இதற்கு முழுக்க முழுக்க சொந்தம் கொண்டாட தகுதியுடையவர்கள் முஸ்லிம்கள். ஏனெனில் போர் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் அதற்குத் தலைமை தாங்கி வழி நடத்தியவர்களும்,அதற்குரிய தண்டனைகளை ஏந்தி உயிர் நீத்தவர்களும் முஸ்லிம்களே.
பாட்னா
வங்காள இராணுவப் பிரிவின் முக்கியத் தளமான தானாப்பூருக்கு அருகில் உள்ள ஊர். பாட்னா புரட்சியை ஒடுக்க நினைத்த டிவிஷன் கமிஷனர் வில்லியம் டைலர், முக்கிய புள்ளியைப் பிடித்து விட்டால் புரட்சிக்கு மூடு விழா நடத்தி விடலாம் என எண்ணினார். அதற்காக, பாட்னா போரை வழி நடத்திய போராளி மௌலவி. அலீ கரீமை உடனடியாகக் கைது செய்து சிறையிலடையுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அவர் எங்கிருந்து இயக்குகிறார் என்பதே தெரியவில்லை! பிறகெப்படி கைது செய்வது? அப்படியானால் அவரது சொத்துக்களை முடக்கி பறி முதல் செய்யுங்கள் என்றார். அலீ கரீமை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ரூபாய் 5,000 சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இவ்வாறு அரக்கப்பரக்க ஆணைகளிட்டும் அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வியிலே முடிந்தன. கடைசிவரை ஆங்கிலேயரின் கண்ணில் படாமல், கலங்கவைத்து ஆட்டம் காட்டியவர் பாட்னா மௌலவி. அலீ கரீம். (விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (வி.போ.மு)வி.என். சாமி பக் 13-25).
அலகாபாத்.
அலகாபாத்தில்புரட்சியை வார்த்தெடுத்து வழி நடத்தியவர் மௌலவி லியாகத் அலி அவர்கள். இவரை அடக்க ஜெனரல் நீல் தலைமையில் ஒரு காட்டுப்படை வந்தது.
இவரது தலைக்கும் ஆங்கில அரசு 5,000 ரூபாய் விலை நிர்ணயித்தது. பிறகு அதே ஆண்டு ஜூலை 24ல் மும்பையில் வைத்து கம்பெனிப் படை அவரைக் கைது செய்தது. ஆங்கிலேயருக்கு எதிராக ஆள்திரட்டிப் போராடிய குற்றத்திற்காக ஆயுள் முழுவதும் நாடு கடத்தி தீர்ப்பளித்தது ஆங்கில அரசு. (விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (வி.போ.மு) வி.என். சாமி பக் 161-166 – (இ.சு.பெ.இ.ப) பக். 820)ரோஹில்கண்ட்


நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ‘விடுதலையின் அமிர்த மஹோத்ஸவ்‘ என்ற பெயரில் மத்திய அரசு சுதந்திர போர் தியாகத்தை எடுத்துரைக்கும் வகையில் மவ்லவி லியாகத் அலி அவர்கள் பெயரில் அவரது தியாகங்களை நினைவுபடுத்தி வெளியிட்ட போஸ்ட் கவர்
மீரத்தில் துவங்கிய புரட்சி இருபது நாட்களாகியும் ரோஹில் கண்டில் எந்தச் சலசலப்பும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது. கான் பகதூர் கான் சிப்பாய்களைச் சந்தித்து புரட்சிக்குத் தூபமிட்டார், தூண்டி விட்டார், பற்றிக் கொண்டது போர். மே31ல் யுத்தம் துவங்கியது. ஆங்கிலேய அதிகாரிகள் ஊரைக் காலி செய்துவிட்டு நைனிடாலுக்கு ஓடும் அளவுக்குப் போராளிகள் தமது வீரத்தை வெளிப்படுத்தினர்.
ரோஹில்கண்டில் பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு டில்லி அரசரின் பச்சைக் கொடி பறக்க விடப்பட்டது. மன்னரின் பிரதிநிதியாக கான் பகதூர் கான் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ரோஹில்கண்ட்மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தபோது தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் கான் பகதூர் கான் ஆங்கிலேயர்களால் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.(விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (வி.போ.மு)வி.என். சாமி பக் 167-168 – (இ.சு.பெ.இ.ப) பக். 790-793).

பதேபூர் புரட்சி, உதவி மாஜிஸ்திரேட்டாக இருந்த ஹிக்மதுல்லாஹ் தலைமையில்.
கான்பூர் புரட்சி, அஸீமுல்லா கான் தலைமையில். மேவார் புரட்சி, பிரோஸ் ஷா தலைமையில். ஆக்ரா புரட்சி, முராத் அலி தலைமையில்,. இப்படிப் புரட்சியின் வழியெங்கும் பூத்துக் குலுங்கிய நறுமலர்கள் இஸ்லாமிய இளவல்களே! (விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (வி.போ.மு)வி.என். சாமி பக் 204 – (இ.சு.பெ.இ.ப) பக். 813,804,816,817,821)…


புகைப்படம் : நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ‘விடுதலையின் அமிர்த மஹோத்ஸவ்‘ என்ற பெயரில் மத்திய அரசு சுதந்திர போர் தியாகத்தை எடுத்துரைக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஹிக்மதுல்லாஹ் அவர்களின் புகைப்படம் (படம் 1)
புகைப்படம் 2 : 1972 ம் ஆண்டு இந்திய அரசால் ஹிக்மதுல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்ட தம்ரா விருது
https://amritmahotsav.nic.in/district-reopsitory-detail.htm?22608

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ‘விடுதலையின் அமிர்த மஹோத்ஸவ்‘ என்ற பெயரில் மத்திய அரசு சுதந்திர போர் தியாகத்தை எடுத்துரைக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட அஸீமுல்லா கான் அவர்களை பற்றிய தொகுப்பு

https://amritmahotsav.nic.in/district-reopsitory-detail.htm?1859
பாகம்-6 தூக்கிச் சுமந்த துயரங்கள்
