ஹஜ்ஜின் மாதங்கள்
2:197 اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ؕؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ
ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின்போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!
(அல்குர்ஆன்: 2:197) ➚.)
அறியப்பட்ட மாதங்களில் ஹஜ் செய்ய வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.
துல்ஹஜ் மாதத்தில் தான் நாம் ஹஜ் செய்கிறோம். ஆனால் மாதங்கள் என்று இவ்வசனத்தில் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது.
அரபு மொழியில் இரண்டைக் குறிக்க இருமை என்ற அமைப்பு உள்ளதால் பன்மையாகக் கூறப்பட்டால் குறைந்தது மூன்று இருக்க வேண்டும். ஹஜ்ஜின் மாதங்கள் குறைந்தது மூன்று மாதங்களாக இருக்க வேண்டும். அல்லது அதைவிட அதிகமாக இருக்க வேண்டும்.
இதை எப்படி நாம் விளங்கிக் கொள்வது? மூன்று மாதங்கள் என்று விளங்கிக் கொள்வதா? அதை விட அதிகம் என்று விளங்கிக் கொள்வதா? அவை யாவை என்பதை எப்படி அறிந்து கொள்வது?என்ற கேள்விகள் எழுகின்றன.
இது குறித்து திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. ஆனாலும் அறியப்பட்ட மாதங்கள் என்ற சொல்லில் இருந்து இதற்கான விளக்கத்தை எப்படிப் பெற வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களும் அதை அறிந்து வைத்து இருந்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அவர்கள் அறிந்து வைத்து இருப்பது தான் தன்னிடமும் ஹஜ் மாதங்கள் என்று அல்லாஹ் அங்கீகரிக்கிறான் என்பதும் இச்சொல்லிலிருந்து தெரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அந்தக் காலத்து மக்களும் எதை ஹஜ்ஜின் மாதங்களாக அறிந்து வைத்திருந்தனர் என்பதை அன்றைய காலத்தில் வாழ்ந்தவர்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஷவ்வால், துல்கஅதா ஆகிய மாதங்களும், துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களும் தான் ஹஜ்ஜுடைய அறியப்பட்ட மாதங்கள்.
நூல் : ஹாகிம்
பொதுவாக துல்ஹஜ் மாதத்தில் தான் ஹஜ் செய்வார்கள். ஹஜ்ஜின் எல்லா கிரியைகளும் துல்ஹஜ் மாதத்தில் தான் உள்ளன. அப்படி இருக்கும்போது ஷவ்வால், துல்கஅதா ஆகிய மாதங்களையும் ஹஜ் மாதங்கள் என்று எப்படி அவர்கள் அறிந்து வைத்து இருக்க முடியும்? என்ற சந்தேகம் எழலாம்.
(ஹஜ்ஜின் மூன்று வகை என்ற தலைப்பில் தமத்துவ ஹஜ் முறையைப் பற்றி விளக்கியுள்ளோம். இதே கேள்வி பதில் பகுதியில் பார்க்கவும்.)
தமத்துவ் வகை ஹஜ் செய்பவர்கள் ஷவ்வால் மாதமே இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்றி விட்டு ஹரம் எல்லைக்குள் தங்கிக் கொண்டு, துல்ஹஜ் மாதம் வந்ததும் மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவார்கள். இவர்களுக்கு மூன்று மாதங்கள் ஹஜ்ஜுடைய மாதங்களாகின்றன. இந்த அடிப்படையில் தான் ஷவ்வால், துல்கஅதா மாதங்களும் ஹஜ்ஜின் மாதங்களாகின்றன.
சக்தி பெறாதவர் மீது ஹஜ் கடமையா?
ஹஜ் செய்வதைப் பற்றி, அல்லாஹ் கூறும் போது,
“அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.
(திருக்கு(அல்குர்ஆன்: 3:97) ➚.)
வயது முதிர்ந்து. உடல் பலவீனமடைந்தவருக்கு ஹஜ் கடமையா என்பதை நுணுக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் இளமையில் பொருள் வசதி இல்லாமல் இருக்கிறார். தள்ளாத வயதில் அவருக்குப் பொருள் வசதி கிடைக்கிறது என்றால் இவருக்கு ஹஜ் கடமையாகாது. காரணம் உடல் வலிமை அவருக்கு இல்லை.
ஒருவர் இளமையில் பொருள் வசதியுடன் இருக்கிறார். உடல் வலிமையுடனும் இருக்கிறார். இவர் தள்ளாத வயது வரை ஹஜ் செய்யவில்லை என்றால் இவர் மீதான ஹஜ் கடமை நீங்காது. தற்போது அவருக்கு உடல் வலு இல்லாவிட்டாலும் உடல் வலுவும், பொருள் வசதியும் இருக்கும் போது அவர் ஹஜ் கடமையை நிறைவேற்றாத குற்றம் அவர் மீது உண்டு.
அவரது பிள்ளைகள் அவருக்காக ஹஜ்ஜை நிறைவேற்றினால் அவரது கடமை நீங்கி விடும். அவருக்குப் பிள்ளைகள் இல்லாவிட்டால் அல்லது அவருக்காக ஹஜ் செய்ய பிள்ளைகளுக்கு வசதி இல்லாவிட்டால் அல்லது வசதி இருந்தும் தந்தைக்காக ஹஜ் செய்யாவிட்டால் ஹஜ் செய்யாத குற்றம் அவர் மீது இருக்கும் ஆனாலும் இந்தக் குற்றத்துக்காக அல்லாஹ்விடம் அவர் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பவன்.
கீழ்க்காணும் ஆதாரங்களைப் பார்க்கவும்
1513 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ رواه البخاري
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஃபள்ல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது கஸ்அம்’ எனும் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க, அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?’ எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்!’ என்றார்கள். இது கடைசி ஹஜ்ஜின்போது நிகழ்ந்தது.
1939 و حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ أَبُو الْحَسَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَا أَنَا جَالِسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي تَصَدَّقْتُ عَلَى أُمِّي بِجَارِيَةٍ وَإِنَّهَا مَاتَتْ قَالَ فَقَالَ وَجَبَ أَجْرُكِ وَرَدَّهَا عَلَيْكِ الْمِيرَاثُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَ عَلَيْهَا صَوْمُ شَهْرٍ أَفَأَصُومُ عَنْهَا قَالَ صُومِي عَنْهَا قَالَتْ إِنَّهَا لَمْ تَحُجَّ قَطُّ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ حُجِّي عَنْهَا رواه مسلم
புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப் பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப் பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப் பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது” என்று சொன்னார்கள். “என் தாயார் மீது ஒரு மாத நோன்பு (கடமையாகி) இருந்தது.
அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?” என்று அப்பெண்மணி கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக் கொள்” என்றார்கள். “என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?” என்று அப்பெண்மணி கேட்டதற்கு, “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்
6699 حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ إِنَّ أُخْتِي قَدْ نَذَرَتْ أَنْ تَحُجَّ وَإِنَّهَا مَاتَتْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ قَالَ نَعَمْ قَالَ فَاقْضِ اللَّهَ فَهُوَ أَحَقُّ بِالْقَضَاءِ رواه البخاري
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்துவிட்டார்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)” என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள்.
தந்தைக்காக பிள்ளைகள் ஹஜ் செய்வதை கடனுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பிட்டுக் காட்டுகிறார்கள். எனவே பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாவிட்டால் அவர்களுக்காக பிள்ளைகள் ஹஜ் செய்ய எந்த ஆதாரமும் இல்லை.
Category: ஹஜ் உம்ரா
