விடுதலை வரலாற்றில் வீரத்தின் விளை நிலமாம். ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர்கள் கேரளத்து மாப்பிள்ளா முஸ்லிம்கள்.

மாப்பிள்ளாக்கள் கேரளாவில் ஆதிக்க வர்க்கமான நம்பூதிரி நாயர் என்னும் உயர் ஜாதி பார்ப்பனர்களின் நிலங்களை குத்தகைக்கு பெற்று பயிர் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் கொஞ்சத்தை எடுத்துக்கொண்டு மிச்சத்தை உரிமையாளருக்கு கொடுத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஆதிக்க சாதியினரின் அதிகாரம் கை மாறியது ஆங்கிலேயரை எதிர்த்து நிற்க முடியாது என்று அஞ்சிய பார்ப்பன நம்பூதிரிகள் அவனுக்கு அடங்கி இருப்பதாகவும் செய்ய வேண்டிய அடிமையை சேவகத்தை அச்சரம் பிசகாமல் செய்து கொடுப்பதாகவும் வாக்களித்தனர். அதை ஏற்றுக் கொண்ட ஆங்கிலேயர்கள் தங்களின் அடிமைப் பணியாளர்களாக அவர்களையே நியமித்தனர்.

குத்தகை நிலங்களின் வரி விகிதத்தை மாற்றி அமைத்தனர் உழைப்பவர்களின் வியர்வையும் ரத்தமும் ஒட்ட உறிஞ்ச பட்டது அப்படி உறிஞ்சக்கூடிய பொறுப்பை ஜமீன்களிடம் நாயர் நம்பூதிரி ஜமீன்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது உழைக்கக்கூடியவனின் கஷ்டத்தை எண்ணிப் பார்க்காமல் தன்னுடைய எஜமானர்களுக்கு தன்னுடைய விசுவாசத்தை காட்டினார்கள் ஜமீன்கள்.

வருமானம் குறைந்தாலும் சரி தங்களுக்கு செலுத்த வேண்டிய வரியை மட்டும் குறைத்து விடக்கூடாது என்றும் வரியை கொடு வரி கட்ட முடியாவிட்டால் நிலத்தை கொடு இதுவே அவர்களின் செயல் திட்டமாக இருந்தது.

வரி கட்ட முடியாமல் நிலங்கள் பிடுங்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1225 மாவட்ட கலெக்டராக இருந்த லோகன் நடத்திய ஆய்வின்படி மலபாரில் இருந்த குத்தகைதாரர்கள் 7994 பேர்.  அதில் கடனாளிகள் 4401 பேர். இவர்கள் செலுத்த வேண்டிய தொகை வட்டியுடன் சேர்த்து 17 லட்சம் ரூபாய். நீதிமன்ற உத்தரவின் பேரில் நிலங்களை விட்டும் அப்புறப்படுத்தப்பட்ட விவசாய தின கூலிகள் 91ஆயிரத்து 720 பேர் ஆங்கிலேயர்களின் இந்தக் கடுமையான வரி விதிப்பு கொடுமைகளால் அதிகரித்துக் கொண்டே போன சூழலில் முஸ்லிம்கள் தங்களுடைய பொறுமையை இழந்தார்கள் ஜமீன்களுடன் ஆன உரசல்கள் வெடிக்கத் தொடங்கின ஆங்கிலேயரும் தாக்குதலுக்கு உள்ளாயினர்.

எரநாடு செம்பரச்சேரி , பந்திக் காடு, வாண்டூர்,   வள்ளுவன் நாடு பொன்னானி பாலக்காடு சிறக்கல் கோட்டையம் குறும்பிற நாடு கோழிக்கோடு என மாப்பிள்ளாக்கள் வாழ்ந்த மலபார் முழுவதும் பதட்டம் நிறைந்த பகுதியாக மாறியது.

1836 இல் துவங்கிய உரசல்கள் 1921 இல் தாங்க முடியாத பேரெழுச்சியாக பொங்கி வழிந்தது பள்ளிவாசல்களில் இமாம்கள் தமது உரைகளின் வழியாக புரட்சியின் வேர்களுக்கு நீர் வார்த்தனர்.  வரியம் குன்னத்து குன்  அகமது ஹாஜியும், கால திங்கள் முஹம்மதும்,  சித்தி கோயா தங்களும் ,  இன்பிச்சிக் கோயா தங்களும் புரட்சி படைக்கு தலைமை தாங்கி வழி நடத்தினர்.

வீட்டிலிருந்த கத்திகளும் தெருவில் கிடக்கும் கற்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆயுதங்களாக உருமாறின காவலர்கள் தாக்கப்பட்டனர்.  ஆங்கிலேய குடியிருப்புகளும் ஜமீன்களின் வாசஸ்தலங்களும் வரைமுறையின்றி தாக்குதலுக்கு உள்ளாயின.

விவசாயக் கூலிகளுக்கு எதிராக ஜமீன்களிடமும் இருந்த பத்திரங்கள் இன்ன பிற ஆவணங்களும் தீயிலிட்டு கொளுத்தப்பட்டன ஆங்கில துறைகளும் அவர்களுக்கு அடிமைச் செயவகம் செய்த நம்பூதிரி நாயகளும் பொதுமக்களால் பிழிந்து எடுக்கப்பட்டனர் சுதந்திரப் போர் வரலாறு இவர்களுக்கு இணையான நெஞ்சுரம் கொண்ட போராளிகளை கண்டதே இல்லை என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு மாப்ளக்களின் மாவீரன் வெளிப்பட்டது அவர்களின் மத நம்பிக்கையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

மாப்பிள்ளாக்கள் பள்ளிவாசல்களை வெறும் இறை வழிபாட்டுத் தலமாக மட்டும் பயன்படுத்தாமல் போராட்ட களத்தின் தலைமை இடமாகவும் ஆக்கிக் கொண்டார்கள் அங்கு தான் திட்டங்கள் தீட்டப்பட்டன. 

புறப்படுவதற்கு முன் சண்டையிலே ஷஹீதாக வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். இறந்தவர்களுக்கு அணிவிக்கப்படுவதை போன்ற வெண்ணிற ஆடையை அணிந்து கொள்வார்கள், மரண சாசனங்களை செய்து கொள்வார்கள் தமது மனைவியரை மணவிலக்கு செய்துவிட்டு படைக்கு புறப்படுபவர்களும் அவர்களில் உண்டு.

மாப்பிளக்கள் குறித்து ஆய்வு செய்து லண்டனில் முனைவர் பட்டம் பெற்ற கான்ராட் உட் மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்ற தனது நூலில் எழுதுகிறார் :

மாப்ளாக்கள், ஆயுதம் தரித்து எழுந்து விட்டால் எதிரிகளை அழித்து ஒழிக்க வேண்டும் , அதிலே தாமும் உயிர் துறக்க வேண்டும் , இரண்டும் தான் அவர்களின் லட்சியமாக இருக்கும். மரணத்தை நேசிப்பதே அவர்களின் தனித்தன்மை என்கிறார் . சாக முடிவெடுத்தவன் பிறரை எப்படி சாகடிப்பான் என்பதை சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.

1921 ஆகஸ்ட் முதல் தேதி அன்று குறிப்பிட்ட சில ஜெமின்களையும் காவல்துறை கண்காணிப்பாளர் அம்முவையும் இன்னும் சில அதிகாரிகளையும் காலி செய்வது என்ற திட்டத்தோடு புக்கோட்டூரில் மாப்பிள்ளாக்கள் திரண்டனர் . அவர்களின் எண்ணிக்கையும் அவர்களிடம் காணப்பட்ட கொந்தளிப்பும் அரச நிர்வாகத்தை பின்வாங்க செய்தது.  

நிலைமையை ஆய்வு செய்த மாவட்ட நீதிபதி தாமஸ் அரசின் கைகள் பலமிழந்து வருகின்றன, நிலைமை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை உடனடியாக சிறப்பு ஆயுதப் படைகளை அனுப்புமாறு மாகாணத் தலைமைக்கு தகவல் அனுப்பினார்.

லீன்ஸ்டர் எனும் 270 அயர்லாந்து வீரர்களைக் கொண்ட படைப்பிரிவு கிளர்ச்சியை அடக்க புறப்பட்டது, பெங்களூரில் இருந்து 90 வீரர்களைக் கொண்ட இந்தியன் பயோனியர் பட்டாலியன் தயாரானது. ஆகஸ்ட் 14 இல் கோழிக்கோட்டில் நடந்த அதிகாரிகள் மாநாட்டில் கலகத்தை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன.

அதன் படி மேலும் 80 லீன்ஸ்டர்கள், 100 ரிசர்வ் காவலர்கள் 60 மலபார் சிறப்பு காவல் படையினர் பல நவீன ஆயுதங்களோடு திருரங்காடி வந்திறங்கினர்.

அச்சம் துளியும் இன்றி அவர்களை எதிர்கொண்ட மாப்ளாக்களை  பற்றி கான்ட்ராட்  வுட் இவ்வாறு வர்ணிக்கிறார்.

கத்தி முனைகள் பொருத்தப்பட்ட துப்பாக்கிகளை கொண்டு ராணுவத்தினர் தாக்க முற்பட்டனர். முன்னேறி வந்த மாப்ளா கூட்டம் ஒரு அங்குலம் கூட பின் வாங்கவில்லை என்கிறார். அவர்கள் தமது வாட்களாலும் தடிகளாலும் ராணுவத்தினர் மீது எதிர் தாக்குதல் நடத்தினார்கள். காவல்துறையினர் தமது தோட்டாக்களால் மாப்ளாக்களின் உடலை துளைக்க ஆரம்பித்தனர்.

இன்னொரு புறம் பரப்பங்காடி ரயில் நிலையம் மாப்ளாக்களால் சேதப்படுத்தப்பட்டது . ரயில் பாதையும் தகர்க்கப்பட்டது, காவல் நிலையங்கள் காணாமல் போயின, மாவட்ட ஆட்சித் தலைவர் தாமஸ் தம்மால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறி ராணுவத்திடம் நிர்வாகத்தை ஒப்படைத்தார். சோர்வடைந்த ராணுவம் ஆகஸ்ட் 21 அன்று பின்வாங்கி கோழிக்கோடு திரும்பியது மலபாரின் நான்கு தாலுகாக்களில் பிரிட்டிஷார் முழுமையாக துரத்தி அடிக்கப்பட்டனர் . அதிகாரம் மாப்ளாக்களின் கைகளுக்கு மாறியது .அலி முஸ்லிமார் தலைமையில் சுதந்திர அரசு பிரகடனம் செய்யப்பட்டது. பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன , கிலாபத் கொடிகளை நட்டு வைத்து சுதந்திர அரசின் எல்லைகள் அறிவிக்கப்பட்டன.  

நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன  உளவு அமைப்புகள் மிகச் சிறப்பாக செயல்பட்டன. ஆங்கிலேயர்களே ஆச்சரியப்பட்டு பாராட்டும் அளவுக்கு மிக நேர்த்தியாக கவனத்தோடு ஒவ்வொரு துறைகளும் சீரமைக்கப்பட்டன. கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையில் கம்பெனி அரசு இதை தனக்கேற்பட்ட மிகப்பெரும் அவமானமாக கருதியது படைபலம் கொண்ட மன்னர்களையும் பயிற்சி பெற்ற சிப்பாய்களையும் களத்தில் சந்தித்த ஆங்கிலேயர்களுக்கு எந்த வித பயிற்சியும் இல்லாத படைபலமும் இல்லாத சாதாரண பொதுமக்கள் அதுவும் கற்களையும் தடிகளையும் தமது ஆயுதங்களாக கொண்டவர்கள் மூலம் ஏற்பட்ட தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை ஆண்டாண்டு காலமாக அந்தப் பகுதியின் எஜமானர்களும் அதிகார வர்க்கமூமான நம்போதிரிகளின் முழு ஆதரவு இருந்தும் கூட நம்மால் ஜெயிக்க முடியவில்லை என்பதை நினைக்க நினைக்க அவர்களுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது எப்படியும் இழந்ததை பெற்றே தீருவதென சூளுரைத்தார்கள் ஒவ்வொரு மாப்பிள்ளைவையும் எதிரியாகத்தான் பார்க்க வேண்டும் இரக்கம் என்பது அவரது எவரது உள்ளத்தையும் எட்டிப் பார்க்கவே கூடாது என்ற படை வீரர்களுக்கு பாலம் நடத்தப்பட்டது 1921 அக்டோபர் 25 இல் டோர்செட் படை பிரிவினர் மேல்முரி மீது தாக்குதல் நடத்தினர்.  குடியிருப்புகள் அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டன டோர்செட் படை முழுதாக அழிந்தாலும் மாப்ளாக்களை அழிக்காமல் விடமாட்டேன் என குடிமை அலுவலர் தொடர்ந்து வெறியூட்டினார்.

பீரங்கிகளை கொண்டு வந்து நிறுத்தி,  கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் காலி செய்தார்கள்.  மக்களை மயானக் குவியலாக்கி மலபாரை மீண்டும் கைப்பற்றினார்கள். அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களே அந்த கொடுமைகளுக்கு சாட்சி சொல்கின்றன.  கொல்லப்பட்ட மாப்பிள்ளாக்களின் எண்ணிக்கை 3000கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 60,000 என்கிறது அரசின் மெட்ராஸ் பதிவேடுகள்.  விடுதலைப் போர் குறித்த நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ள எழுத்தாளர் வி. என். சாமி அவர்கள் ஆங்கில அரசு தரும் புள்ளி விபரம் தவறானது என்றும் கொல்லப்பட்டவர்கள் மொத்தம் 10,000 பேர் என்றும் கூறுகிறார்.

கூட்ஸ் வண்டி கோரச் சாவு

மாப்ளாக்கள் மீண்டும் ஒரு கலவரத்தை கனவில் கூட கண்டு விடக்கூடாது என்பதற்காக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது கம்பெனி அரசு. கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு சிறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

1400 குடும்பங்கள் நாடு கடத்தப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  அந்தத் தீவை மேம்படுத்த, சாலை போட ,மரங்களை வெட்ட, பயிர் செய்ய என  பல்வேறு வகைகளில் அவர்கள் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்தனர்.  அவர்கள் அனைவரும் நாடு விடுதலை அடைந்த பின்னர் ஊர் திரும்ப மனமில்லாமல் அங்கேயே தங்கி விட்டனர் என்று அந்தமான் தீவின் வரலாறு கூறுகிறது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி கைதிகள் முகாமில் மாப்ளாக்களைக் கவனிப்பதற்காக பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு தனிச்சிறையாக மாற்றப்பட்டது.  1570 பேர் அங்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.  இவ்வாறு நாட்டின் பல்வேறு சிறைகளுக்கும் மாப்ளாக்கள் பகுதி பகுதியாகப் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

கைது நடவடிக்கையின் உச்சக்கட்டமாக ஒரு கொடுமை அரங்கேறியது நூற்றுக்கணக்கான மாப்ளாக்களை காற்றுப் புக முடியாத கூட்ஸ் வண்டிக்குள் அள்ளித் திணித்தது ஆங்கில அரசு கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இவர்களை சித்திரவதை செய்வதற்காகவே தயார் செய்யப்பட்டுள்ள தனிமை சிறை நோக்கி வண்டி புறப்பட்டது போகும் வழியெங்கும் மரண ஓலம் ஓங்காரமாய் ஒலித்தது.  அந்த ஒலியின் ஓசை கூட சிறிது நேரம் தான் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அதுவும் அடங்கியது.  1921 நவம்பர் 10 அன்று கோவை போத்தனூர் இரயில் நிலையத்தில் எந்த சலனமும் இன்றி அமைதியாக வந்து நின்றது மனித சரக்குகளை சுமந்து வந்த ரயில் பெட்டி.

பூட்டப்பட்டிருந்த பெட்டியின் கதவுகளை அழுத்தி திறந்தார் நிலைய பொறுப்பாளர். திபுதிபுவென கொட்டியது மனித உடல்கள் வந்து விழுந்த சடலங்களை பார்த்து நிலைகுலைந்து போனார் நிலைய அதிகாரி.

அதில் தப்பிப் பிழைத்த ஒருவர் பின்னர் சொன்ன வாக்குமூலத்தில்,  துப்பாக்கியின் பின்புறத்தால் எங்களை குத்தித் தள்ளி வண்டியைத் தாழிட்டார்கள்.  நான் பெட்டியின் ஒரு மூளைக்கு தள்ளப்பட்டேன். யாரும் எங்கும் நகர முடியாத அளவுக்கு,  தலையைக் கூட திருப்ப முடியாத அளவுக்கு நெருக்கியடித்துக் கொண்ட நின்றோம்.  சரியாக என் நாசி துவாரத்திற்கு அருகில் ஒரு ஆணி துவாரமொன்று ஆணி அறையாமல் காலியாக இருந்தது.  அதில் மிகச் சரியாக என் மூக்கின் நுனி பொருந்திக் கொண்டது அதன் வழியாக என் நாசிக்கு சுவாசிக்க கொஞ்சம் காற்று கிடைத்தது.  என் உயிர் மூச்சை இழுத்துப் பிடிப்பதற்கு எனக்கு அது உதவியாக இருந்தது.

உள்ளிருந்த வெப்பத்தின் அழுத்தம் தாளாமல் சிலருடைய உடல் வெடித்துச் சிதறியது.  எந்த கட்டுப்பாடுமின்றி மலமும் சிறுநீரும் வெளியேறிக் கொண்டிருந்தது.  அவற்றில் நனைந்து நனைந்து பொரிப்பதற்கு தயாரான மசாலா தடவிய மீனைப் போல மாப்ளாக்கள் இருந்தார்கள் என்கிறார்.

அதிலே செத்துப் போனவர்களின் எண்ணிக்கை மொத்தம் 70.  அவர்கள் அனைவரும் கோவை ரயில் நிலையத்தை ஒட்டியே அடக்கம் செய்யப்பட்டனர்.  விடுதலைப் போரில் முஸ்லிம்கள் சிந்திய இரத்தத்திற்கு அந்தக் கப்ருகள் இன்னும் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன.

மாப்ளாக்களின் பேரெழுச்சியையும் பெரும் தியாகத்தையும் தி இண்டிபெண்டண்ட் பத்திரிக்கை கவர் ஸ்டோரியாக வெளியிட்டு அப்போதே கெளரவித்தது. அந்தக் கட்டுரையில் கிலாஃபத் எழுச்சியின் போது பொக்காத்தூரில் 600முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் பட்டாம்பியில் கொல்லப்பட்டவர்கள் 500 பேர் என்றும் திரூரிலிருந்து கோவைக்கு வரும் சரக்கு இரயிலில் ஏற்றப்பட்டு மூச்சுத் திணறி கொள்ளப்பட்டவர்கள் 55 பேர் என்றும் செய்தி வெளியிட்டது.

கம்பெனிக்கு எதிரான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியதாகக் கூறி 160 மாப்ளாக்களுக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது ஆங்கிலேய நீதிமன்றம்.  அவர்களுக்கான தண்டனையை மலபாரிலேயே நிறைவேற்றினால் தேவையற்ற பதற்றம் ஏற்படும் என்று அவர்கள் அனைவரையும் திருச்சிக்கு அழைத்து வந்து தூக்கிலிட்டு கொன்றார்கள்.

இதை கேள்விப்பட்ட திருச்சி முஸ்லிம்கள் மரண தண்டனையை தடுக்க முடியாவிட்டாலும் மரணித்த முஸ்லிம்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது செய்வோம் என்று தீர்மானித்தனர்.  அதற்காக ஒரு இயக்கத்தையும் உண்டாக்கினர். அதிகாரிகளிடம் பேசி உடலைப்  பெறுவதிலிருந்து அடக்கம் செய்து முடிப்பது வரை அனைத்து காரியங்களையும் அந்த அமைப்பின் கீழ் செய்ய வேண்டும் என ஏக மனதாக முடிவு எடுத்தனர்.

படே ஹஸ்ரத்  என்றழைக்கப்படும் செய்யது முர்துஸா  சாஹிப் அவர்களின் தலைமையில்  கான் பகதூர் கலிஃபுல்லா சாஹிப், பாலக்கரை காஜா மைதீன் சாஹிப்,  முஹம்மது இப்ராஹிம் சாஹிப்,  ஜின்னா தெரு முஹம்மது யூசுப் சாஹிப் , ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு அஞ்சுமனே ஹிமாயதே  இஸ்லாம் என்ற பெயரில் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

இந்த அமைப்பின் சார்பில் இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்து கிரீயைகளும் செய்யப்பட்டன.  திருச்சி காஜாமலைப் பகுதியில் அவர்கள் அனைவரும் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.  காஜாமலை நினைவு கல்வெட்டிலும் அஞ்சு மனே ஹிமாயதே இஸ்லாம் நினைவு கல்வெட்டிலும்  இந்த செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.  கைதிகளைத் தேடி திருச்சிக்கு வந்த மாப்ளாக்களின் குடும்பத்தார் பலரும் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல மனமின்றி அங்கேயே தங்கி விட்டனர். மூதாதையர்களின் நினைவை நெஞ்சில் தாங்கி நிற்கும் அவர்களின் வழித்தோன்றல்களை இன்றும் திருச்சியில் காணலாம்.

ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி இதுவரை சொல்லப்பட்ட முஸ்லிம்களின் போராட்ட  கள தியாகங்களை உங்கள் மனக் கண்களில் ஓட விட்டுப் பாருங்கள்.  அதன் வேர் முதல் விழுது வரை முஸ்லிம்கள் எந்த அளவிற்கு இரண்டறக் கலந்திருக்கிறார்கள் என்ற உண்மை புரியும்.  இந்த தியாகங்கள் எங்கேனும் பேசப்படுகிறதா?  தியாகிகளைப் பற்றி பேசுவது ஒருவகையில் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியல்லவா?  நன்றியை விட வேறென்ன கைமாறை நாம் அவர்களுக்குச் செய்து விட முடியும்?  அனைவரின் உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைக்கும் போது முஸ்லிம்கள் மட்டும் எந்த வகையில் அதற்கு தகுதியற்றவர்களாகிவிட்டார்கள்? 

முதல் இந்தியச் சுதந்திரப் போரின் நாயகனாக வலம் வந்த பகதூர் ஷா அந்த முதிய வயதில் முரட்டுக் கழுதை ஹட்ஸனோடு ஏன் அல்லல்பட வேண்டும்?   வயது போன காலத்தில் வசதியாக வாழ்வதை விட்டு விட்டு வறுமையை ஏன் தன் வாழ்வாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?  புரட்சி முடிந்ததும் அதிகாரம் எனக்கல்ல.  அனைத்தையும் உங்களிடமே ஒப்படைப்பேன் எனக் கூறுபவர் போருக்கு என் புறப்பட வேண்டும் ? அவரோடு கைகோர்த்து நின்றதற்காக ஆயிரமாயிரம் மக்கள் தங்கள் வாழ்வையே அழித்துக் கொண்டார்களே , வீடிழந்து, வேலையிழந்து தம் உற்றார் , உறவினர் பலரின் உயிரையும் இழந்து வீதிக்கு வந்து வேரற்ற மரங்களாக ஏன் அவர்கள் வீழ்ந்து போக வேண்டும்?  வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய பலருக்குள் இவர்களும் ஒருவராக இருந்திருக்க முடியாதா? 

சொந்த நலனை தூக்கி எறிந்து விட்டு,  மண்ணின் மானம் காக்க , சந்ததிகளின் சோகம் நீக்க  சோதனைகளை தாங்கிய மக்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஓரங்கட்டப்பட வேண்டுமா?

ஜாலியன் வாலாபாக்,  செக்கிழுத்த வ. உ. சி., சனாதனத்தைக் காப்பதற்காக ஆஷ் துரையைக்  கொன்ற வாஞ்சி நாதன்,  தூக்கிலிடப்பட்ட கட்ட பொம்மன்,  கொடி காத்த குமரன், இவர்களையெல்லாம் விட மாப்ளாக்களின் வீரமும் தியாகமும் எந்த விதத்தில் குறைந்து போனது? 

நேதாஜி கூட சுதந்திர இந்தியாவை ஆஸாத் ஹிந்த் என்று பிரகடனம் தான் செய்தார்.  ஆனால் மாப்ளாக்களோ அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயர்களை விரட்டி விட்டு  சுதந்திர அரசை நிறுவி சில மாதங்கள்  அந்த அரசாங்கத்தை நடத்தியும் காட்டி விட்டார்கள்.  இது சாதாரணமாக மறக்கடிக்கப்பட்டு விடுகிற சாதனையா? 

செக்கிழுத்தார்கள், சிறை சென்றார்கள் இத்தனை ஆண்டு சிறை அத்தனை ஆண்டு சிறை என்றெல்லாம் சிலாகித்து பேசுகிறோம் . சரக்கு பெட்டியின் ஆணி ஓட்டையில் மூச்சையிழுத்த மாப்ளாவின் தியாகம் இதைவிட மட்டமா?  ஒற்றை வரிச் செய்தியாக ஓரஞ்சாரத்தில் கூட அதற்கு நாம் இடம் கொடுக்கவில்லையே நினைத்தாலே குலை நடுங்கும் அளவுக்கு ஈவிரக்கமின்றி,  விலங்குகளை கூட கொல்லத் தயங்கும் விதத்தில்  பெட்டிக்குள் அடைத்து கோரமாகச் சாகடிக்கப்பட்டார்களே சர்வதேச அளவில் நம் முன்னோர்களின் தியாகத்தை சொல்வதற்கு தகுதியானதாக அது இருந்தும் முஸ்லிம் என்ற காரணத்தால் அதை முதுகுக்குப் பின்னால் தூக்கியெறிவதை எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்? 

காங்கிரஸ் என்றாலே காந்திஜி,  நேருஜி,  ராஜாஜி  என்று பேசப்படும் ஜீவாத்மாக்களின்  வரிசையில் , ஜீவ மரண போர் நடத்திய காலத்தில் அதன் ஜீவனைத்  தக்க  வைக்க  தங்கள் ஜீவனை அர்ப்பணித்த முஸ்லிம்களைப்  பற்றிப் பேசப்படுவதில்லையே ஏன் ?  சுதந்திரப் போருக்கு முன் படிப்பிலும் பணத்திலும் கொடி கட்டிப் பறந்தவர்கள்,  சுதந்திர தேசத்தின் கனவுகளில் லட்சத்தையும் கோடியையும் கொட்டிக் கொடுத்தார்கள்.  அவர்களின் வாரிசுகள் பரம ஏழைகளாகி இன்று பட்டினி கிடக்கிறார்கள்.  அன்று பாரிஸ்டர்களாக வலம் வந்தவர்கள் காந்தியின் மீது கொண்ட  காதலால் கல்வியை விட்டார்கள்.  இன்று கல்வி நிலையங்களில் கடைசி இருக்கை  கூட காலி இல்லை  என்று விரட்டப்பட்டு  கை நாட்டுப் பேர்வழிகளாக காலம் தள்ளுகிறார்கள்.

ஏன் இந்த இழிநிலை?  ஒரு காலத்தில்  முதல் வரிசையில் இருந்து தேசத்தை முன்னோக்கி  இழுக்க பாடுபட்டவர்கள்  இன்று அனைவருக்கும்  பின்னால்  இருப்பதன்  பின்னணியில் முஸ்லிம்களின் மறைக்கப்பட்ட  தியாக வரலாறு இருக்கிறது என்றால் அது தவறல்ல, மிகையுமல்ல.  எனவே சமூகமே வரலாற்றை நாம் நினைவு கூறுவோம் வரலாற்றை  படிப்போம் பிறருக்கு எடுத்துரைப்போம்.

மேலும் அறிய : https://thedal.onlineymj.com/மாப்பிள்ளா-முஸ்லிம்களும/(opens in a new tab)